வங்கியில் புகுந்து லாக்கர் அறை கதவை உடைத்த முகமூடி கொள்ளையர்கள்
வங்கியின் பூட்டை உடைத்து புகுந்து லாக்கர் அறை கதவை முகமூடி கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். மேலும் அலாரம், கண்காணிப்பு கேமராவையும் நொறுக்கிவிட்டு தப்பி ஓடிய அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
கொட்டாம்பட்டி,
வங்கியின் பூட்டை உடைத்து புகுந்து லாக்கர் அறை கதவை முகமூடி கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். மேலும் அலாரம், கண்காணிப்பு கேமராவையும் நொறுக்கிவிட்டு தப்பி ஓடிய அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
வங்கியில் புகுந்து கைவரிசை
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள கச்சிராயன்பட்டியில், திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பணிமுடிந்து வங்கியை ஊழியர்கள் பூட்டிச்சென்றனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை வங்கி வளாகத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா, அலாரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு வங்கியின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் மேலாளர் அறை உள்ளிட்ட இடங்களுக்குச்சென்று பொருட்களை சேதப்படுத்தினர்.
அலாரம் ஒலித்தது
வங்கியின் லாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்) அறையை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி ஒலித்ததால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
எச்சரிக்கை கருவி ஒலியால் அக்கம் பக்கத்தினர் வங்கிக்கு ஓடி வந்து பார்த்தபோது வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து, உடனே இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமாராணி, சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முகமூடி கொள்ளையர்கள்
வங்கியின் முகப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா, அலாரம் உடைக்கப்பட்ட நிலையில் வங்கியின் உள்ளே இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததும், வங்கியின் உள்ளே 3 பேர் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 3 பேரும் முகமூடி அணிந்து கைவரிசை காட்டி உள்ளனர்.
அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். மதுரையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொள்ளை முயற்சி குறித்து வங்கிக்கிளை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகை-பணம் தப்பின
வங்கியின் அலாரம் ஒலித்ததால் பல லட்ச ரூபாய் பணம்- நகைகள் தப்பின. நான்கு வழிச்சாலையில் உள்ள இந்த வங்கியில் இரவு நேர காவலாளி இல்லை. இந்த வங்கியின் அருகே உள்ள அரசு தொடக்க கூட்டுறவு வங்கியில் ஏற்கனவே 2 முறை கொள்ளை முயற்சி நடந்துள்ள நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த பகுதியில் இரவு ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி, கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.