திருடப்பட்ட ஆடுகள் 2 மணிநேரத்தில் மீட்பு


திருடப்பட்ட ஆடுகள் 2 மணிநேரத்தில் மீட்பு
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே திருடப்பட்ட ஆடுகளை 2 மணி நேரத்தில் மீட்டு நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே திருடப்பட்ட ஆடுகளை 2 மணி நேரத்தில் மீட்டு நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆடுகள் திருட்டு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி கலைச்செல்வி (வயது.40). இவர் தான் வளர்க்கும் 4 ஆடுகளை வீட்டின் வாசலில் கட்டி வைத்திருந்தார்.

அந்த ஆடுகளை நேற்று முன்தினம் திடீரென காணவில்லை. மர்ம நபர்கள் அவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி எடையூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் செய்தார். இதையடுத்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன், ஆனந்த், தனபால் ஆகியோர் உடனடியாக ஆடுகளை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

சந்தையில் விற்பனைக்கு...

இதனிடையே திருடப்பட்ட ஆடுகள் புதுக்கோட்டை மாவட்டம் திருவோணம் பகுதியில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக திருவோணம் சந்தைக்கு சென்று சோதனை நடத்தியபோது கலைச்செல்வியின் 4 ஆடுகளும் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.

சரக்கு வேன் பறிமுதல்

அந்த ஆடுகளை விற்பனை செய்து கொண்டு இருந்த கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லப்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 50) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கலைச்செல்வியின் வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை திருடி சரக்கு வேன் மூலம் சந்தைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரெங்கராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 4 ஆடுகளையும், அவற்றை கடத்திக்கொண்டுவர பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். ஆடுகள் திருடப்பட்ட தகவல் அறிந்து 2 மணிநேரத்தில் அவற்றை மீட்ட போலீசாரை, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.


Next Story