சென்னையில் திருடுபோன மோட்டார் சைக்கிளுக்கு பெயர் மாற்றம்: கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது நடவடிக்கை
சென்னையில் திருடுபோன மோட்டார் சைக்கிளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அமுதராஜ். இவருடைய மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடுபோனது. இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் கண்டுகொள்ளாததால் தனது மோட்டார் சைக்கிளை தொடர்ந்து தேடி வந்தார்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளுக்கான அனைத்து நகல் ஆவணங்களும் தன்னிடம் இருக்கும் நிலையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமீர்அப்பாஸ் என்கிற பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி அறிந்து அமுதராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளை மீட்டு தரக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை குமரன் நகர் போலீசார் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
ஊழியர்கள் அலட்சியம்
இதில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பெண் உதவியாளர் ஆகியோரின் அலட்சியத்தால் தான் 'ஆர்.சி. புக்' உரிய ஆவணங்கள் இன்றி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பண்ருட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் 'ஆர்.சி.புக்' பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பணியில் அலட்சியமாக செயல்பட்ட பெண் ஊழியர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், சென்னை போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் 2 பெண் ஊழியர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் மோட்டார் சைக்கிளுக்கான 'ஆர்.சி. புக்' பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்த பண்ருட்டி ஓட்டுனர் பயிற்சி பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.