தேர்த்திருவிழாவில் கல்-பாட்டில் வீச்சு
தேர்த்திருவிழாவில் கல்-பாட்டில் வீசப்பட்டது.
தொட்டியம்:
தேர்த்திருவிழா
தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியில் தாழைமடலாயி பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் 250 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தோளூர்பட்டி, உப்பாத்துபள்ளம், முதலிப்பட்டி, எலந்தமடைப்புதூர், தொட்டியப்பட்டி, கீழகார்த்திகைப்பட்டி, மேலகார்த்திகைப்பட்டி, பாலசமுத்திரம், கணேசபுரம் உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எல்லையில் இருந்து கிராமத்திற்கு தேரை தூக்கிச்சென்று பூஜைகள் நடைபெற்ற பிறகு பக்கத்து ஊர் எல்லையில் தேரை வைப்பது வழக்கம்.
அதன்படி நேற்று 7-வது ஊராக பாலசமுத்திரத்தில் திருத்தேர் வீதியுலா நடைபெற்றது. தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் தேர் வந்தபோது அங்கிருந்த மர்மநபர்கள் தேரை சுமந்து வந்தவர்கள் மற்றும் கூட்டத்தினர் மீது கல் மற்றும் பாட்டில்களை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காயம்
இதில் தேரை சுமந்து வந்தவர்கள் சிலர் மீது கற்கள் பட்டதில், அவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேரில் பார்வையிட்டார். அப்போது, தேர் தூக்கி வந்தவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவாறு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்த்திருவிழாவில் கல்வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.