திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து கல் உருண்டு ஆம்னி வேன் மீது விழுந்ததால் பரபரப்பு


திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து கல் உருண்டு ஆம்னி வேன் மீது விழுந்ததால் பரபரப்பு
x

திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து கல் உருண்டு ஆம்னி வேன் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 2 பெண்கள் உயிர் தப்பினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து கல் உருண்டு ஆம்னி வேன் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 2 பெண்கள் உயிர் தப்பினர்.

கல் உருண்டது

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை அமைந்துள்ளது. தினமும் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். இந்த மலைக்கோட்டையை சுற்றிலும் ஆர்.வி.நகர், முத்தழகுபட்டி, சின்னக்காளைநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், கோவில்கள் உள்ளன. இதனால் மலைக்கோட்டை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்..

இந்த நிலையில் இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்தது. அங்குள்ள முத்தழகுபட்டி-சின்னக்காளைநகர் சந்திப்பு பகுதியில் 2 பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மலைக்கோட்டையில் இருந்து ஒரு கல் பயங்கர சத்தத்துடன் உருண்டு வந்தது. அந்த சத்தத்தை கேட்டு பயந்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே அந்த கல் ஒரு முருங்கை மரத்தின் மீது விழுந்தது.

ஆம்னி வேன் சேதம்

இதனால் 2 பெண்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேநேரம் கல் விழுந்ததில் முருங்கை மரம் முறிந்தது. அதன்பின்னர் சாலையின் எதிரே சுமார் 30 அடி தூரத்தில் ஒரு தெருவில் நின்ற ஆம்னி வேன் மீது கல் விழுந்தது. அதில் வேனின் பின்பகுதி சேதம் அடைந்தது. அடுத்த சில நொடிகளில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஒரு ஆட்டோ அந்த வழியாக சென்றது. நல்லவேளையாக ஆட்டோ மீது கல் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கல் உருண்டு விழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மலைக்கோட்டையில் சிறிய, பெரிய கற்கள் நிறைய உள்ளன. அவை மழைக்காலத்தில் உருண்டு விழுவது வழக்கமாக உள்ளது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருக்கிறது. எனவே மலைக்கோட்டையில் விழும் நிலையில் இருக்கும் கற்களை அகற்ற வேண்டும் என்றனர்.


Next Story