ராஜேந்திர சோழன் கால கல் தூண்கள் கண்டுபிடிப்பு
தேன்கனிக்கோட்டை அருகே ராஜேந்திர சோழனின் 6-ம் ஆட்சி ஆண்டு கால பழமையான 4 கல் தூண்களை வரலாற்று ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகே ராஜேந்திர சோழனின் ஆட்சி ஆண்டு கால பழமையான 4 கல் தூண்களை வரலாற்று ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
4 கல் தூண்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த 4 அடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட 4 கல் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு தூண்களில் 2 ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும். தற்போது அங்கிருக்கும் சிவன் கோவிலில் இந்த தூண்கள் இருந்தன. பின்பு வந்த ஒய்சாள மன்னர்களின் காலத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழைய கோவிலை புதுப்பித்துள்ளனர்.
பின்னர் அந்த பழைய கோவிலில் இருந்த அந்த தூண்களும் வெளியே எடுத்து வரப்பட்டு, அதன் மீது, கல்லால் ஆன தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. அதன் பின்னர் இந்த பகுதியில் வீடுகள் கட்ட தொடங்கிய பின் இதன் தொட்டியில் உள்ள மேல் பலகைகள் எல்லாம் இந்த தூண்களை மூடி மண்ணில் புதைந்து போனது.
இந்த கல்வெட்டு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
முரசுநாடு
முதலாம் ராஜேந்திரனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் இக்கல்வெட்டு, முரைசூர் நாட்டு தென்கரை குணநல்லூர் மஹாதேவருக்கு திருவமுதுக்காக பராந்தகன் இரணமுகநான செம்பியன் மிலாடுடையான் என்பவன் இவ்வூராரிடம் பொன் கொடுத்து நிலம் வாங்கி தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. தானத்தின் எல்லைகளை குறிப்பிடும் போது ஒத்தைக்கல் மலையம்மன் என்ற ஒரு அம்மனின் பெயரை குறிப்பிடுகிறது.
அந்த அம்மன் இன்றும் மாரியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளதும் கள ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது. ஓசூருக்கு முரைசூர் நாடு என்ற பெயர் இக்கல்வெட்டில்தான் முதன்முதலாக வருகிறது. இதுவரை 13-ம் நூற்றாண்டில் தான் முரசுநாடு என்ற பெயர் வந்ததாக கருதப்பட்டுவந்தது. ஆனால் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓசூர், முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வெளிப்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல், சோழர் காலத்தில் மதகொண்டபள்ளியின் பெயர் குணநல்லூர் என்றுஇருந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்கது
பின்னர் ஒய்சாளர்கள் இந்த பகுதியை ஆண்டபோது இப்பகுதியை ஆட்சி செய்து வந்த பூர்வாதராயர்கள் இந்த கோவிலை புனரமைத்துள்ளனர். அதன் பின்பு இந்த கோவிலின் பெயர் திரு அங்கநாதர் என்றும், அங்கீஸ்வர நாயனார் என்றும் அழைக்கப்பட்டு தற்போது அர்க்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. அம்மனின் பெயர் ஸ்ரீவந்பெருந்தேவி நாச்சியார் என்பதாகும். அதற்கான கல்வெட்டுகளும் கோவிலில் காணப்படுகின்றன.
அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிக பழமையான கல்வெட்டு இதுவாகும். இதுவரை ராஜேந்திரனின் 24 மற்றும் 26-ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டுகள் முறையே கங்காவரம் மற்றும் அனுசோனை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. அவை நடுகல் கல்வெட்டுகளாகும். அவனது ஆட்சி கால கல்வெட்டாகும். இது கோவிலுக்கு வழங்கப்பட்ட தானத்தை குறிக்கும் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகப்பழமையான கோவில் மதகொண்டப்பள்ளி அர்க்கீஸ்வரர் கோவில் என்பதும், ஓசூர் 1020-ம் ஆண்டிலேயே முரசுநாடு என்றழைக்கப்பட்டதும் தெரிய வருகிறது. எனவே இக்கல்வெட்டு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார் மற்றும் முன்னாள் தலைவர் ராஜா ஆகியோர்உடனிருந்தனர்.