கல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது


கல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் கல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் கல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கல் குவாரி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வழங்கினார். அப்போது புரவிபாளையம், சேர்வைகாரன்பாளையம் பொதுமக்கள், விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி தாலுகா புரவிபாளையம் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனம் கல் குவாரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளதாக தெரியவந்து உள்ளது. குவாரி அங்கு வந்தால் சுற்றி உள்ள பொதுமக்களுக்கும், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். குவாரியை சுற்றிய தோட்டத்து சாலைகளில் இருக்கும் வீடுகளின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு பாதிப்படையும். வெடி பொருட்களை பயன்படுத்தி பாறைகளை உடைக்கும் போது கற்கள் குவாரியை சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு வந்து விழுவதால் கால்நடைகள், விவசாய தொழிலாளர்கள் பாதிக்கக்கூடும்.

அறப்போராட்டம் நடத்தப்படும்

பாறை பொடிகள் காற்றில் கலந்து விவசாய பயிர்களின் மேல் படிந்து விளைச்சல் பாதிக்கும். இதனால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குவாரியில் இருந்து 500 மீட்டர் தொலைவில உள்ள ஆற்றில் அரசு சார்பில் கட்டப்பட்ட தடுப்பணைகள் விரிசல் ஏற்பட்டு பாதிப்பு அடையும்.

குவாரியை சுற்றியும் குறுகலான சாலை இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சோலைவனமாக உள்ள புரவிபாளையம், சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு கல் குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது. அனுமதி கொடுத்தால் பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் அறப்போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story