அனுமதி இன்றி சுவர் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
வேலூர் விருப்பாட்சிபுரத்தில் அனுமதி இன்றி சுவர் கட்டும் பணியை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வேலூர் விருப்பாட்சிபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவோரம் அனுமதி இன்றி சுவர் கட்டப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.
அப்போது அங்கு அம்பேத்கர் உருவப்படம் வரைவதற்காக சாலையோரத்தில் 2 தூண்கள் எழுப்பி சுவர் கட்டப்பட்டு வருவதும், ஓரிருநாளில் அம்பேத்கர் படம் வரைய உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அதனை தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர் அப்பகுதி மக்களிடம், சாலையோரத்தில் அரசு இடத்தில் சுவர் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த சுவர் கட்டுவதற்கு எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. எனவே இந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள கூடாது. அதையும் மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முன்எச்சரிக்கையாக அங்கு பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருப்பாட்சிபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அதே இடத்தில் சுவர் கட்டி அதில் அம்பேத்கர் உருவப்படம் வரைவதற்கு அனுமதிக்கக்கோரி வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் இன்று (திங்கட்கிழமை) மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.