சோதனைச்சாவடிகளில் தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்குவது நிறுத்தம்
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் சோதனைச்சாவடிகளில் தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டை
தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து சோதனைச்சாவடிகள் தமிழக எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் தற்காலிக வாகன அனுமதி சீட்டுகள் பெற்ற பின்பு தமிழக வாடகை வாகனங்கள் மற்றும் இதர மாநில வாகனங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிக அனுமதி சீட்டுகளை வெளியில் உள்ள கணினி மையங்களில் எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச்சாவடி வழியாக சென்று வருகிறார்கள். புதிய நடைமுறை மூலம் இந்த பக்தர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே பழைய நடைமுறை படியே இருக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.