ராமநத்தம் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
ராமநத்தம் அருகே குழந்தை திருமணம் போலீசாா் தடுத்து நிறுத்தினா்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் பாண்டியன் (24) என்பவருக்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கடலூர் குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவுக்கும், ராமநத்தம் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் கொரக்கவாடி கிராமத்துக்கு சென்று விசாரரணை நடத்தினர்.
விசாரணையில் பாண்டியனுக்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவருடைய பெற்றோர்களிடம் 18 வயது பூர்த்தியடையாமல் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும், மீறி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு கடலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.