பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்;திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது


பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்;திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது
x

குமரி மாவட்டத்தில் மழை குறைந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மழை குறைந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழை குறைந்தது

குமரி கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று மழை சற்று குறைந்தது. காலையில் இருந்து மாலை வரை மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மாலையில் சாரல் மழை நீடித்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் இருந்து வெயிலும், மேகமூட்டமுமாக மாறி, மாறி சீதோஷ்ண நிலை இருந்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

உபரிநீர் திறப்பு நிறுத்தம்

பேச்சிப்பாறை அணை- 9, பெருஞ்சாணி அணை- 2.2, சிற்றார்-1 அணை- 3.4, சிற்றார்-2 அணை- 13.6, புத்தன் அணை- 1.8, பூதப்பாண்டி- 5.2, கன்னிமார்- 2.2, தக்கலை- 12.4, இரணியல்- 6.4, பாலமோர்- 1.4, திற்பரப்பு- 11, அடையாமடை- 3, குருந்தங்கோடு- 3 என்ற அளவில் மழை பதிவானது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,016 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு 489 கன அடியும், உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 666 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மழை குறைந்ததாலும், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் நேற்று காலை 8 மணியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 41.83 அடியாக உள்ளது.

பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 403 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 70.60 அடியாக உள்ளது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 40 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 63 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9 கன அடி தண்ணீரும் வருகிறது.

வெள்ளப்பெருக்கு குறைந்தது

பேச்சிப்பாறை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நீர்திறப்பு குறைவு மற்றும் மழை பெய்யாததால் நேற்று காலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. அதே சமயத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இருந்த போதிலும் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரிசெய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.


Next Story