காளை விடும் விழா தடுத்து நிறுத்தம்
பென்னாத்தூரில் காளை விடும் விழா தடுத்து நிறுத்தப்பட்டது.
காளை விடும் விழா
வேலூர் அருகே பென்னாத்தூரில் பொன்னியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் கொண்டு வந்து இருந்தனர்.
காளைகள் ஓடுபாதையில் மட்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இதையடுத்து காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணி அளவில் சோதனை ஓட்டமாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தடுத்து நிறுத்தம்
எருது விடும் விழாவை கண்காணிக்க டெல்லியில் இருந்து பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் வந்திருந்தார். அப்போது ஓடுபாதையில் சென்ற ஒரு காளை மெயின் ரோட்டிற்கு சென்று அங்கு மிட்டல் நிறுத்தி வைத்திருந்த கார் மீது உரசியபடி சென்றது.
காளைகள் மெயின் ரோட்டுக்கு சென்றதால் மாடுகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் உரிய முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை எனக் கூறி காளை விடும் விழாவை பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் தடுத்து நிறுத்தினார்.
வாக்குவாதம்
இதனால் விழா குழுவினர் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஆத்திரம் அடைந்து எக்காரணத்தைக் கொண்டும் காளை விடும் விழாவை தடுத்த நிறுத்தக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டமோ அல்லது சாலை மறியலோ செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
ரத்து
இதையடுத்து காளைகளுக்கு நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் திரும்பி கொடுக்கப்பட்டன. காளைகளின் உரிமையாளர்கள் காளைகளை அவிழ்த்து கொண்டு சென்றனர். இதையடுத்து திருவிழா ரத்து செய்யப்பட்டது.
காளை விடும் விழாவை காண வந்த பொதுமக்கள் விரத்தியுடன் கலைந்து சென்றனர். 2 நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு பாதையில் காளை விடும் விழா நடத்தப்படும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.