சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
பொன்னை அருகே சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
காட்பாடி தாலுகா பொன்னை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் சைல்டுலைன், சமூகநலத்துறை அலுவலர்கள், பொன்னை போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது கடந்த கல்வியாண்டு பிளஸ்-2 முடித்த 17 வயது சிறுமிக்கும், திருவலத்தை சேர்ந்த உறவினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதும், விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறுமியிடம் பெற்றோரிடம் எழுதி வாங்கப்பட்டது.
சிறுமியை தொடர்ந்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைல்டுலைன், சமூக நலத்துறை அலுவலர்கள், சிறுமியின் பெற்றோரிடம் அறிவுறுத்தினர்.