கடையில் பதுக்கி வைத்திருந்த153 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
சின்னமனூர் அருகே கடையில் பதுக்கி வைத்திருந்த 153 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சின்னமனூர் அருகே நால்ரோடு பகுதியில் ஓடைப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவரது மோட்டார்சைக்கிளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 36) என்பவரிடம் புகையிலை பொருட்கள் வாங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஓடைப்பட்டி சாவடி தெருவில் உள்ள கார்த்திக்கின் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மூட்டை, மூட்டையாக 153 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் வருவதை கண்டதும் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.