தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட  2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட 2¼ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட 2¼ டன் ரேஷன் அரிசியை தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சோதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டிஅய்யன் மற்றும் போலீசார் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவில் உள்ள ஒரு காம்பவுண்டுக்குள் சந்தேகப்படும்படியாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு மூட்டைகளை அடுக்கி கொண்டு இருந்த ஒரு மர்ம ஆசாமி, போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

பறிமுதல்

அதில் 45 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் சுமார் 2 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் 2¼ டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.


Next Story