வீதிகள்தோறும் அதிகரித்த தெருநாய்கள் தொல்லை
வீதிகள்தோறும் அதிகரித்த தெருநாய்கள் தொல்லை
கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது, வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்த அட்டகாசத்தால் நாய் கடிக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்திலும் இந்த பரிதாப நிலை தான் உள்ளது. நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வெளியே பெரும்பாலானவர்களின் புலம்பலாக உள்ளது.
நாய்கள் தொல்லை
ஆங்காங்கே சுற்றித்திரியும் நாய்கள் தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கிடக்கும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு வளர்கின்றன. இது தவிர சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்று திரிகின்றன. இதில் சில வெறி நாய்களாக மாறும் போது சாலைகளில் செல்வோர்களை எல்லாம் கடிக்க தொடங்கி விடுகிறது.
இதுஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது.
கருத்தடை செய்யப்படுமா?
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி நகர் நல மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்.
நாகர்கோவிலில் கோட்டார், பீச்ரோடு, ஈத்தாமொழி சந்திப்பு, பார்வதிபுரம், வடசேரி, பாலமோர் சாலை, நாகராஜா கோவில் ரதவீதிகள், கோட்டார் ரெயில் நிலைய பகுதி, கம்பளம் சாலை, இடலாக்குடி, செட்டிகுளம் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் நாய்கள் வாகன ஓட்டிகளில் செல்வோரை விடாமல் துரத்துகிறது.
இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனி சரணாலயம்
நாய்கள் தொல்லை தொடர்பாக கோட்டார் பகுதியை சேர்ந்த மிக்கேல் ராசு கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் ஆங்காங்கே நாய்கள் வலம் வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாய்கள் திடீரென குறுக்காக செல்லும் போது இருசக்கர வாகன விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன.
குறிப்பாக இரவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மணிமேடை வழியாக வடசேரி பஸ் நிலையம் செல்லமுடியாத நிலை உள்ளது. காரணம் நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. எனது தனிப்பட்ட கருத்த என்னவென்றால் தெருநாய்களும் ஒரு உயிரினமே. அதனால் அவற்றிற்கென்று என ஒரு தனி சரணாலயம் போன்று அமைத்து உணவு, பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடையும் பண்ணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
21 பேர் பலி
நாகர்கோவில் கோணம் கல்லூரி மாணவி ஆலன் கூறியதாவது:-
கேரளாவில் சமீப காலமாக தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் மட்டும் தெருநாய்கள் கடித்ததில் சுமார் 21 பேர் பலியாகி உள்ளனர். எனவே தெருநாய்கள் தானே என நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. தற்போது நாகர்கோவில் மாநகரிலும் தெருநாய்களின் தொல்லை சற்று தலைதூக்கி உள்ளது. இரவில் வெளியே செல்பவர்களை தாக்கும் சம்பவமும் தொடர் கதையாகி வருகிறது.
நாய் கடிக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிகளில் ஊசி போட வருவதாக தெரிவிக்கிறார்கள்.
செட்டிகுளம், வடசோி, கம்பளம், பீச்ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் நாய்களின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் அச்சமின்றி வெளியே செல்ல சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் விளக்கம்
இதுபற்றி கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
போலியோ, மஞ்சள்காமாலை நோய்களை போன்று ரேபிஸ் என்று சொல்லக்கூடிய நாய் கடிக்கு முன்கூட்டியே போட்டு கொள்வதற்கு தடுப்பூசி எதுவும் கிடையாது. நாய் கடித்த பிறகு ஊசி போட முடியும். வீட்டு நாய்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவர் மீது நாயின் உமிழ்நீர் அதாவது எச்சில் பட்டால் அது நாய் நக்கினாலோ அதற்கு ரேபிஸ் ஊசி போட வேண்டாம். நாய் நகங்கள் மூலம் சிறிய காயம் ஏற்பட்டாலோ நமது உடலில் நாயின் பல் மட்டும் சிறு காயம் ஏற்பட்டால் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
மேலும் நாய் கடித்து காயங்கள் ஏற்பட்டாலோ, நமது உடலில் ஏதாவது ஒரு இடத்தில் புண் இருந்து அதில் நாய் நக்கும் போது உமிழ்நீர் படும். அப்படி இருந்தாலும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நல மையங்கள் ஆகியவற்றில் நாய்க்கடிக்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது போதுமான இருப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.