பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்


பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், சிதம்பரம், விருத்தாசலத்தில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை ஓட்டல்கள் மற்றும் இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுகளையும், குப்பைகளில் கிடக்கும் கழிவு பொருட்களையும் தின்றுவிட்டு தெருக்களில் சுற்றித் திரிகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த தெருநாய்களுக்கு முறையாக வெறிநோய் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் அந்தத் தெரு நாய்கள் கடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடி பகுதியில் நாய் கடித்து ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் பல இடங்களில் சாலையின் குறுக்கே நாய்கள் ஓடியதால், மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் விபத்தில் சிக்கும் சம்பவமும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

பொதுமக்களை துரத்துகின்றன

குறிப்பாக வண்டிப்பாளையம் சாலை, மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் சாலை, நேரு நகர், பாண்டுரங்கன் நகர், முத்தையா நகர், ஸ்டேட் வங்கி காலனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. அதிலும் நத்தவெளி சாலையோரமும், வேணுகோபாலபுரம் பள்ளி செல்லும் சாலையிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு கழிவுகளை தின்றுவிட்டு சுற்றி திரியும் நாய்கள், அவ்வழியாக செல்லும் பொது மக்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. அதற்கு காரணம், இறைச்சி கழிவுகளை தின்று பழக்கப்பட்ட நாய்கள் மனிதர்களை கடிக்க துரத்துவதாக பொது மக்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலூர் சில்வர் வீச்சில் நடை பயிற்சிக்கு சென்ற போலீஸ்காரர் உள்ளிட்ட 4 பேரை வெறி நாய் கடித்து குதறிய சம்பவம் நடந்தது.

தடுப்பூசி

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம், திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி 10-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அந்த அளவிற்கு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. அதனால் நாய் தொல்லையால் பொதுமக்கள் தினம் தினம் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து நெல்லிக்குப்பம் முத்து கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகும். ஆனால் இங்கு நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வீட்டை விட்டு தனியாக வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. தனியாக தெருவில் நடந்து சென்றாலே நாய்கள் துரத்தி வருகின்றன. அதனால் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பல்ராம் கூறுகையில், மாநகராட்சியில் எந்தவொரு தெருக்களுக்கு சென்றாலும் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விடாமல் துரத்துகின்றன. இதனால் அச்சத்தில் இருசக்கர வாகனங்களில் இருந்து தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. ஆகவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மக்களின் எண்ணிக்கைக்கு ஈடாக...

விருத்தாசலத்தை சேர்ந்த அமலா கூறுகையில், விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் நாய்கள், பன்றிகள், குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. அந்த தெருநாய்கள் கழிவுநீர் கால்வாய்களிலும், குப்பை தொட்டிகளிலும் உணவுகளை தேடி வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சில நாய்கள் வெறி பிடித்த நாய்களாக மாறி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. விருத்தாசலம் வி.என்.ஆர் நகர், பெரியார் நகர், வீரபாண்டியன் தெரு, செல்வராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை, மக்கள் தொகைக்கு ஈடாக பெருகி வருகிறது. நடந்துச் செல்லும் பொதுமக்களை துரத்திச்சென்று கடிப்பதாலும், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதாலும் பொதுமக்கள் இப்பகுதியில் நடந்து செல்வதற்கே அச்சப்படுகின்றனர். இரவில் தெருவில் தனியாக நடமாட முடியாத அளவிற்கு நாய்கள் பெருகி உள்ளதால் நடந்து செல்லும் போது பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்று நாய்க்குட்டிகளுக்கு போட்டால் தான் வீட்டிற்கு செல்ல முடிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நாய்களை பிடித்து அகற்றி, இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றார்.

உணவு பொருட்கள்

சிதம்பரம் சுமன்:- சிதம்பரம் நகரில் பெருகி வரும் நாய்கள் தொல்லையால் வீட்டை விட்டு தனியாக செல்லவே அச்சமாக உள்ளது. இறைச்சி கழிகள் மற்றும் குப்பைகளில் கிடக்கும் உணவு பொருட்களை தின்று விட்டு வெறி பிடித்தது போல் நாய்கள் சுற்றித்திரிவதால், நாய்களை பார்க்கவே பயங்கரமாக காணப்படுகிறது. இந்த தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தெருநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

திட்டக்குடி பூமிநான்:- திட்டக்குடி மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். ஆனால் இப்பகுதியில் பொதுமக்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். அந்த அளவிற்கு தெருநாய்கள் தொல்லை காணப்படுகிறது. குறிப்பாக பகல் நேரத்தை காட்டிலும், இரவு நேரத்தில் தான் அனைத்து தெருக்களிலும் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரத்தில் தெருநாய்களுக்கு அஞ்சியே பலர் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

மாணவர்கள் அச்சம்

நந்திமங்கலம் அருள்ராஜா:- பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழிகளில் ஏராளமான இறைச்சிக் கடைகள் இருப்பதால், அப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.


Next Story