வேனில் ஏற்றி வந்த வைக்கோலில் தீப்பிடித்தது
வேனில் ஏற்றி வந்த வைக்கோலில் தீப்பிடித்தது
காங்கயம்,
காங்கயத்தில் வேனில் ஏற்றி வந்த வைக்கோல் போரில் மின் கம்பி உரசி தீப்பிடித்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் வேன் சேதமடையாமல் தப்பியது.
மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே முத்தூரில் இருந்து ஒரு சரக்கு வேன் வைக்கோல்போர்களை ஏற்றிக்கொண்டு காடையூர் செல்ல காங்கயம் வழியாக வந்தது.நேற்று மதியம் 1.30 மணியளவில் காங்கயம் அண்ணாநகர் பகுதியில் வந்தபோது சாலையின் மேல்புறம் செல்லும் மின்கம்பியில் வேனில் இருந்த வைக்கோல் போர் உரசி தீப்பிடித்தது.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போட, வேன் டிரைவர் உடனடியாக வேனை நிறுத்தி கீழே இறங்கி வந்து வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினார். இருப்பினும் தீ மளமளவென பரவ தொடங்கியதால் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
வேன் தப்பியது
தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டுகள் வேனில் இருந்து உடனடியாக கீழே இறக்கப்பட்டது.
பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் வைக்கோல் போரில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். வைக்கோல் போரில் பற்றிய தீயை விரைவாக அணைத்ததால் வேன் சேதமடையாமல் தப்பியது. இருப்பினும் வைக்கோல்போர் பாதி அளவு எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.