பகலில் எரியும் தெருவிளக்குகள்
பகலில் எரியும் தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குன்னூர்
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த தெருவிளக்குகள் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெரும்பாலான பகுதிகளில் மின்விளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரிவதில்லை. இதனால் குடியிருப்புகள் இருளாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இரவில் மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். தற்போது வனப்பகுதிகளில் இருந்து காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில இடங்களில் பகலில் தெருவிளக்குகள் எரிகின்றன. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.