கபிலர்மலை, பரமத்தி வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட உரங்கள்-வேளாண்மை உதவி இயக்குனர்கள் தகவல்
கபிலர்மலை, பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நுண்ணூட்ட சத்துக்கள்
பயிர்களுக்கு குறைந்த அளவில் தேவைப்படும் இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும். இரும்புச்சத்து பயிரின் பச்சை தன்மையை சீராக வைக்க உதவுகிறது. துத்தநாகச்சத்து கணு இடைப்பகுதி வளர்ச்சி, புரதங்களின் சேர்க்கையில் பங்காற்றி மொத்த மகசூலில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகிறது. தாமிர சத்து பயிரின் இனப் பெருக்கத்தை அதிகரித்து அதிக மகசூல் பெற உதவுகிறது.
மாங்கனீசு சத்து பச்சையம் உருவாதல், ஒளிர்சேர்க்கை, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். பல்வேறு முக்கிய பணிகளை செய்யும் இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவதன் மூலம் நமது பயிரின் மொத்த மகசூலில் 15 முதல் 20 சதவீம் கூடுதலாக பெறலாம்.
50 சதவீத மானியம்
வேளாண்மை துறை, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பொட்டாஷ் பேக்டீரியா மற்றும் நுண்ணூட்ட சத்து கலவைகளான சிறு தானிய பயிர் கலவை, எண்ணெய் வித்து கலவை, தென்னை நுண்ணூட்ட கலவை என ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு சத்துக்களை தேவையான விகிதத்தில் கலந்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வேளாண்மை துறை வழங்கி வருகிறது.
நடப்பு பருவத்தில் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற ஜி.எஸ்.டி. நீங்கலாக 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்பட உள்ளது. இதனை வாங்குவதற்கு விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் எண்ணுடன் கபிலர் மலை மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேண்டும்.
இந்த தகவலை கபிலர்மலை, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் ராதாமணி மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.