'போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்'


போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்
x

சட்டம்- ஒழுங்கு பிரச்சினையின்றி விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார். இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பார்த்திபன், பிரியதர்ஷினி, மித்ரன், ராஜன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விதிமுறைகளை கண்காணிக்க...

கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.தேன்மொழி, பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது. அதேநேரத்தில் அனுமதி பெறாமல் சிலைகள் வைக்கப்பட்டால் அந்த சிலைகளை அகற்ற வேண்டும். விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் பகுதியில் விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் எவ்வளவு சிலை வைக்கப்படுகிறது, நீர்நிலைகளில் கரைக்க எப்போது கொண்டு செல்லப்படுகிறது என ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

விநாயகர் சிலை ஊர்வலம், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். பிற மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளிலும், சிலைகள் கரைக்கும் இடங்களிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்கக்கூடாது. அதற்கு தகுந்தாற்போல் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

மேலும் சிலைகள் ஊர்வலத்தில் பங்குகொள்ளும் யாராவது முறைகேடான வகையில் நடந்துகொண்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலத்தினர் வழியில் எந்த பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ ஏதாவது சேதம் ஏற்படுத்தினால் ஊர்வலத்தினரை கட்டுப்படுத்தும் விதத்தில் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுத்து சட்டம்- ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும். சிலைகள் ஊர்வலம் முடிந்தவுடன் அதில் கலந்துகொண்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஊர்வலத்திற்கான விதிமுறைகள் மீறப்பட்டால் ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியை ரத்து செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story