ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் நாசர் எச்சரிக்கை
ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார்.
ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார்.
திடீர் ஆய்வு
மதுரை ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பண்ணை மற்றும் பால் பை நிரப்பும் பகுதிகளையும், சுகாதார முறையில் ஊழியர்கள் பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அங்கு மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பொது மேலாளர்கள், துணைப்பதிவாளர்கள், துறைதலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர்களுடன் திறனாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் அமைச்சர் நாசர் பேசியதாவது:-
பால் கொள்முதலை உயர்த்தி, பால் வினியோகம் தடையின்றி நடைபெற வேண்டும். களப்பணியாளர்கள் சிறப்புடனும், சுறுசுறுப்புடனும், செயல்பட வேண்டும். தரமற்ற பாலை கையாளும் தனியார் மீது உணவு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மொத்த பால் குளிர்விக்கும் நிலையங்கள் மூலம் தரமான பால் கொள்முதல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும்.
ஒத்துழைப்பு
ஒன்றியத்தின் பால் பை நிரப்பும் பிரிவுகளில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த விதிகளின்படி சரியான எண்ணிக்கையில் தொழிலாளர்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பால் வினியோக வழித்தட ஒப்பந்ததாரர்கள் பால் குறித்த நேரத்தில் நுகர்வோருக்கு சென்றடைய ஆவினுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் இந்த ஆய்வின் போது ஆவின் மேலாண் இயக்குனர் சுப்பையன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆவின் பொதுமேலாளர்கள், துறைப்பதிவாளர்கள், துறைதலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.