பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பதவி ஏற்ற திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.
திருவாரூர்:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பதவி ஏற்ற திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்பு
திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ்குமார் நேற்று பதவி ஏற்று கொண்டார். இவர் திருநெல்வேலி துணை போலீஸ் ஆணையராக இருந்து பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். பதவி ஏற்ற பிறகு, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருந்து வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் மக்கள் எந்தவித பாதிப்பின்றி இருப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.
கடும் நடவடிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும்.பொதுமக்கள் என்னை எந்த நேரத்தில் தொடர்பு கொண்டு பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கலாம்.சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சைபர் கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கஞ்சா, புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.