வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள், மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள், மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள், மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்.
3 ஆண்டு சிறை
சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா வெங்கடேசன் கூறியதாவது:- மயில் நமது தேசிய பறவையாகும். அதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இதே போல வன சட்டப்படி முயல் வேட்டையாடுவதும், செம்மரம், சந்தன மரம் போன்ற அரிய வகை மரங்களை அனுமதி இன்றி வெட்டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது வனத்துறை மூலமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்று தரப்படுகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கை தாலுகா ஓ.புதூர் கிராமத்தில் உள்ள ஏளாத்தம்மன் கோவில் பின்புறம் உள்ள புஞ்சை காட்டில் வளர்ந்திருந்த சந்தன மரத்தை வெட்டி இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற 3 பேருக்கு சிவகங்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.7500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
அவர்கள் வெட்டி வந்த சந்தன மரம் மற்றும் அதற்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே போல புதுக்கோட்டை வனச்சரகத்தில் மயில் வேட்டையாடிய ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வன சட்டப்படி வனவிலங்குகளை வேட்டையாடுவது மற்றும் காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவது, அனுமதி இன்றி அரிய வகையான செம்மரம், சந்தன மரம் ஆகியவைகளை வெட்டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.