அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாகா்கோவில்:
குமரி மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் கூட்ட அரங்கில் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகர ஆணையர் ஆனந்த் மோகன், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், ராஜேஷ் குமார், பிரின்ஸ், முதன்மை கல்வி அதிகாரி முருகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், வீட்டுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.
எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் முறையாக சென்று சேரவில்லை. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலையில், அண்டை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது ஏற்புடையதல்ல. மாவட்டத்தில் கால்வாய்கள் முறையாக தூர்வாரி தண்ணீர் நெல் பயிர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஓராண்டாக பணம் வழங்கப்படவில்லை. தனி நபருக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசிகள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி மக்களுக்கு தரமான ரேஷன் அரிசி வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகள்
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் அரசு சலுகையுடன் சிகிச்சை பெற பி.எச்.எச்.எஸ் வகையிலான ரேஷன் கார்டு முக்கிய ஒன்றாக உள்ளது. அவற்றை பெற தகுதியானவர்களுக்கு அதனை உடனே மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். பேச்சிபாறை பகுதியில் மலையோர மக்களுக்காக தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மலையோர மக்கள் 6-ம் வகுப்பிற்கு பிறகு படிக்க வேண்டும் என்றால் படகில் வந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விஜய் வசந்த் எம்.பி.
தொடர்ந்து விஜய்வசந்த் எம்.பி. பேசும் போது, 'எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் நிதி பள்ளி கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதே கட்டிடத்திற்கு அரசு சார்பிலும் நிதி ஒதுக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே புதிய கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகளுக்கு அதிகாரிகள் தரப்பில் நிதி பரிந்துரை செய்யும்போது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் மற்றும் எம்.பி.யை கலந்தாலோசனை செய்தால் நல்லது' என்றார்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-
ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் விடுவது தொடர்பாக அரசாணை வந்துள்ளது. அதனடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 55 பேரூராட்சிகளில் 500 மின் மாற்றிகள் தற்பொழுது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு பழுதடைந்த கட்டிடங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது 6 பள்ளிகளில் புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியானவர்களுக்கு பி.எச்.எச்.எஸ். கார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக கண்காணிக்க குழு ஒன்று உள்ளது. அந்த குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 8 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகரில் பார்கிங் அனுமதி பெற்றுவிட்டு குடோனாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேல்புறம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிக அளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் மாதந்தோறும் அவர்களின் வீடுகளுக்கு சென்று ஊட்டச்சத்து உணவுகள் குறித்த மருத்துவ பரிசீலனை வழங்க மருத்துவ குழு அமைக்கப்படவுள்ளது. மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.