உணவுப்பொருள் கடத்தலுக்கு துணையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி


உணவுப்பொருள் கடத்தலுக்கு துணையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உணவுப்பொருள் கடத்தலுக்கு துணையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படுகிறதா? என்று கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நெல் அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 2,271 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தயார் நிலையில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது 46 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நெல் கொள்முதல்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 43 லட்சம் மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 16.07 லட்சம் மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இதுவரை இல்லாத வகையில் 49,706 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 91,882 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது 21,225 ஹெக்டேர் பரப்பளவில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு தகுந்தாற்போல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் சொந்த தேவைக்குபோக அரசுக்கு 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.12 ஆயிரம் கோடிக்குமேல் பயிர்கடன்

தமிழ்நாட்டில் 16.07 லட்சம் மெ.டன் நெல் கொள்முதலில் 13.05 லட்சம் மெட்ரிக் டன் நெல் 10 டெல்டா மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு ரூ.10,292 கோடி விவசாய பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடிக்குமேல் பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் 16.65 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இதில் புதிய உறுப்பினர்கள் என்ற முறையில் 2.17 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு ரூ.1,483.58 கோடி பயிர் கடன் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்களில் 697 தொடக்க வேளாண்மை சங்கங்கள் மூலம் 2.64 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,707.67 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் முதல்முறையாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 2.47 லட்சம் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ரூ.1,125.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணம் வாங்குவதை தவிர்த்திடும் விதமாக உயர் அலுவலர்கள் தலைமையில் குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை

மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தவிர்த்திடும் விதமாகவும் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பபட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 11,166 வழக்குகள் பதியப்பட்டு 15,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குண்டர் சட்டத்தின் கீழ் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமின்றி அதற்கு மூளையாக செயல்படுவோர், முக்கிய புள்ளியாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 'நம்ம பகுதி- நம்ம ரேஷன்" திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 75 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நெல் சேமிப்புத்தளங்கள்

மழை மற்றும் இயற்கை பேரிடரால் நெல் கொள்முதல் பணிகள் பாதிக்காமல் இருக்க நபார்டு வங்கி உதவியுடன் 10 மாவட்டங்களில் ரூ.238 கோடியில் 2.80 லட்சம் மெ.டன் நெல்லை சேமிக்கும் வகையில் 206 இடங்களில் நெல் சேமிப்புத்தளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போதுவரை 106 இடங்களில் 1.42 லட்சம் மெ.டன் நெல் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 205 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களும் அடங்கும். இந்த அரிசி வழங்கப்படுவதால் தாய்மார்களுக்கு ரத்தசோகை போன்ற நோய்கள் பாதிப்பிலிருந்து காக்க முடியும். 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் யசோதாதேவிஇ, இளஞ்செல்வி, மண்டல மேலாளர் யுவராஜ், துணைப்பதிவாளர்கள் பிரியதர்ஷினி, நளினா, சொர்ணலட்சுமி, நாராயணசாமி, ராமதாஸ், பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி நாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story