கனிமவள விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் கனிமவள விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கனிமவள விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் கனிமவள விதிமீறல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்த துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசும்போது கூறியதாவது:-
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கனிம வளம் (மண் மற்றும் கற்கள்) அனுமதியில்லாமலும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை மற்றும் கண்காணிக்கவும், கனிமவள புவியியல் ஆய்வாளர், தனி தாசில்தார்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து வாகன சோதனை ஆய்வாளர்கள் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் கடந்த வாரம் வாகன சோதனை மேற்கொண்டதில் அதிக பாரம் ஏற்றி வந்த 4 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக பாரம் ஏற்றியும், அனுமதியில்லாமலும் வருகின்ற வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், கனிமவளங்களை கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தினை தவிர்த்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மேற்குறிப்பிட்டுள்ள குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடும் நடவடிக்கை
இத்தகைய அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்திடவும், வாகன டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்களில் போலீஸ், நெடுஞ்சாலை ரோந்து அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்திற்குள் இதுபோன்ற கனிமவள விதிமீறல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் மீதும் சோதனை மேற்கொண்டு, அபராதம் விதித்து கடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குனர் குருசாமி, துணை இயக்குனர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) தங்க முனியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.