இறைச்சி கழிவுகளை கால்வாயில் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
இறைச்சி கழிவுகளை கால்வாய்களில் விடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.
இறைச்சி கழிவுகளை கால்வாய்களில் விடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.
கூட்டம்
குடியாத்தம் நகரமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, சுகாதார அலுவலர் மொய்தீன் நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மறைந்த சண்டை பயிற்சியாளர் திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது-
மனோஜ்: எனது வார்டில் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படவில்லை. பல நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. எனவே இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிட்டிபாபு: எனது வார்டு மக்கள் குடிநீருக்கு குழாய் தண்ணீரையே நம்பி உள்ளனர். ஆனால் குடிநீர் வினியோகம் தாமதம் ஆவதால் சிரமப்படுகின்றனர். எங்கள் பகுதியில் குடிநீர் தேவையை தவிர மற்ற தேவைகளுக்கான தண்ணீரை பயன்படுத்த ேமாட்டாருடன் மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும்.
ஜாவித் அகமது, மேகநாதன்:் எங்கள் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளன. எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறைச்சி கழிவுகள்
நவீன்சங்கர்: கால்வாய்களில் இறைச்சி கழிவுகளை விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இறைச்சி கழிவுகளை கழிவு நீர் கால்வாய்களில் விடும் இறைச்சி கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ மோகன்: நகரில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது நாய் தொல்லை இல்லாத பகுதியயே இல்லை என்ற நிலை உள்ளது. எனவே அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்டபாணி: எங்கள் பகுதியில் நாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்(அப்போது உறுப்பினர் விஜயன் பேசுகையில் நாய்களுக்கும் குரங்குகளுக்கும் வாக்குரிமை இருந்தால் நாம் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது என வேடிக்கையாக கூறினார்)
ராணி:தாழையாத்தம் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தை சீர் செய்யவும், நேரு பூங்காவை உடனடியாக திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு நகர்மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் பேசுகையில், ''நாய்கள் மற்றும் குரங்குகள் பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சில இடங்களில் குடிநீர் பல நாட்களுக்கு ஒருமுறை வருவதாக வந்த புகார்களின் பேரில் உடனடியாக கவனிக்கப்படும்.
இறைச்சி கழிவுகளை கால்வாயில் விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். விரைவில் இறைச்சி கடைக்காரர்கள் அழைத்து கூட்டம் போட்டு கழிவுகளை கால்வாய்களில் விடக்கூடாது என அறிவுறுத்தப்படும், வார்டுகளில் குப்பைகள் தேங்கா வண்ணம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.