கேபிள் ஆபரேட்டர்கள் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை
கேபிள் ஆபரேட்டர்கள் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு கேபிள் டி.வி.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கட்டணமின்றி இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை பொது மக்களுக்கு குறைந்த மாத சந்தா தொகையில், தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் உரிமம் பெற்ற உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்களது இணைப்புகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வேறு எந்த ஒரு நபருக்கும் விற்கவோ அல்லது மாற்றம் செய்யவோ கூடாது. சூழ்நிலை காரணமாக வேறு ஒரு நபருக்கு விற்பனை அல்லது மாற்றம் செய்யும் பட்சத்தில் முறையாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் துணை மேலாளர் வாயிலாக பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்படும்.
நிலுவை தொகை
மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை 3 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் வைத்திருந்தால் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் உரிமம் பெற்ற 397 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய 'அனலாக்' நிலுவை தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டத்தின் படி சம்மந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.