கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சாிக்கை
குமரி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா புழக்கம்
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே கன்னியாகுமரி நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கன்னியாகுமரி வரும் வாகனங்களின் பதிவு எண்ணை சேமித்து வைக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.
இதே போல நாகர்கோவில் மாநகர பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம். ஏற்கனவே வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் குற்றங்கள் தற்போது குறைந்துள்ளது. சங்கிலி பறிப்பு சம்பவங்களும் குறைந்துள்ளன.
146 பவுன் நகை
கோவிலில் உண்டியல் திருட்டு, வீடு புகுந்து திருட்டு ஆகிய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 வழக்குகளில் 146 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 516 பவுன் நகை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. உண்டியல் மற்றும் வீடு புகுந்து திருட்டுகள் தொடர்பான வழக்குகளில் 150 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே தனிப்படைகள் அமைத்து அந்த வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளியூரில் இருந்து ஒரு பட்டாலியன் போலீசை பாதுகாப்பு பணிக்கு அனுப்பிவைக்க கேட்டு உள்ளோம்.
கந்து வட்டி
கந்துவட்டி தொடர்பான புகார்கள் இருந்தால் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம். கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. அந்த பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். அங்கு அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் முழுவதும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.