லஞ்சம் வாங்கும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை -ஐகோர்ட்டு உத்தரவு
லஞ்சம் வாங்கும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்ற வழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு போலீஸ்துறையில் 1977-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்து 2010-ம் ஆண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஓய்வுபெற்றவர் குமாரதாசு. இவர் பணியின்போது, சென்னை பெரியார்நகர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் உள்ள பெட்டிக்கடைக்காரர் ரவியிடம் வாரம் ரூ.100 மாமூல் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து ரவி அளித்த புகாரின் அடிப்படையில், குமாரதாசுக்கு எதிராக விசாரித்த உயர் அதிகாரிகள், அவருக்கு 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர். அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு குமாரதாசு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
முட்டுக்கட்டை போடும் பிசாசு
அரசு ஊழியர்கள் தங்கள் பதவிக்கான கண்ணியத்துடன், நேர்மையுடன், லஞ்ச லாவண்ய குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். லஞ்சம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் பிசாசு ஆகும்.
அரசின் நலத்திட்டங்களை பெறவும் லஞ்சம் கொடுக்க வேண்டியதுள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, உயர் அதிகாரிகளும் லஞ்சம் பெறுகின்றனர்.
கரையான்
லஞ்சத்தை தடுக்க தனி போலீஸ் படை இருந்தாலும், அதில் உள்ள போலீசாரின் எண்ணிக்கை, லஞ்சத்தை ஒழிக்கும்விதமாக இல்லை. அதனால் ஒட்டுமொத்த பொது நிர்வாகமும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
லஞ்சத்துக்கு எதிரான விழிப்புணர்வும், நடவடிக்கையும் போதுமானதாக இல்லை. லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற கனவே மகிழ்ச்சி தருகிறது. அதுபோல ஒரு சாதாரண குடிமகன், அரசு அலுவலகத்துக்குள் சென்று எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தன்னுடைய உரிமையை பெற்றால், அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும்.
திடீர் சோதனை
எனவே, லஞ்ச ஒழிப்பு துறையின் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தி, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி, லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். பணி விதிகளின்படி அரசு ஊழியர் தங்களது சொத்து விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு வழங்குவது கடமையாகும். ஆனால், அவ்வாறு வழங்கப்படும் சொத்து விவரங்களை பல உயர் அதிகாரிகள் முறையாக பராமரிப்பது இல்லை.
போலீஸ் அதிகாரிகள் மாமூல் வாங்கிக்கொண்டு நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்க வியாபாரிகளை அனுமதிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில்கூட நடக்கமுடியாமல் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
குற்ற வழக்கு
மனுதாரருக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தண்டனையை பார்க்கும்போது லஞ்சத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக கருதவில்லை என்பது தெரிகிறது. எனவே, இதுபோல போலீசார் மாமூல் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமூல் வாங்கும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.