ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.
ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் ரேஷன் கடைகளில் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
நடவடிக்கை
தொடர்ந்து மீளவிட்டான் பகுதியில் உள்ள தூத்துக்குடி நுகர்வோர் வாணிப கழக கிட்டங்கியில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரேஷன் கடைகளில் பொருட்களை அனுப்பி வைக்கும் கணக்குகளை மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தவறுகள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். பின்னர் மீளவிட்டான், தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார். அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டார். பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்து கேட்டறிந்தார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, குடிமை வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமாரசுவாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தூத்துக்குடி மண்டல மேலாளர் முத்துலட்சுமி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ் குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.