தேசிய கொடியை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தேசிய கொடியை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய கொடியை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தின அமுத பெருவிழா
இந்தியாவின் 75-வது சுதந்திர தின திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் ஆகஸ்டு 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்கவிடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனிநபர் இல்லங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் மரியாதைக்குரிய இடத்தில் இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் தேசிய கொடி பறக்கவிடப்பட வேண்டும். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை தேசிய கொடி பறக்கவிடப்பட வேண்டும்.
சூரியன் மறையும் முன்பு உரிய மரியாதையுடன் கொடி இறக்கப்பட்டு, மடித்து வைத்து பராமரிக்கப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் தேசிய கொடியினை எவ்விதத்திலும் தவறாக பயன்படுத்தக் கூடாது. கொடியினை சேதப்படுத்தவோ, அழுக்காக்கவோ கூடாது. சேதமுற்ற கொடியினை ஏற்றக்கூடாது. கொடியின் மீது எழுதக்கூடாது.
சுதந்திர தினம் போன்ற தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொடி ஏற்றப்படும் நிகழ்வில் மட்டும் கொடியில் மலர்கள் வைக்க ஆட்சேபனை இல்லை.
கொடி ஏற்றப்பட்டவுடன், கொடியின் முன்பு உடலை நேராக வைத்தபடி அனைவரும் கொடி வணக்கம் செய்யவேண்டும். இவற்றைக் கடைப்பிடிக்காமல் தேசியக் கொடியினை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புகார் தெரிவிக்க எண்கள்
கிராம ஊராட்சிகளைப் பொருத்தவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியினை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பதிலாக அவர்களது உறவினர்களோ, குடும்ப உறுப்பினர்களோ, நண்பர்களோ கொடி ஏற்றக் கூடாது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லாத சமயத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு முன்னதாக அறிவிப்பு செய்த பின்னர் ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், அவரும் இல்லாத நிலையில் மூத்த உறுப்பினர் ஒருவரும் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செய்ய வேண்டும்.
இதனைப் பின்பற்றாமல் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியினை ஏற்றுவதாக குழப்பம் ஏற்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால், கலெக்டரின் கைப்பேசி எண் 9444137000,
திருவண்ணாமலை கோட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கைப்பேசிஎண் 7402606611 மற்றும் செய்யாறு கோட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கைப்பேசி எண் 7402903703 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.