தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை- வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை


தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை- வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை
x

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பஸ் கட்டணம் உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்களில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு -பெருந்துறைக்கு ரூ.13-ல் இருந்து ரூ.15 ஆகவும், ஈரோடு -ஊத்துக்குளிக்கு ரூ.24-ல் இருந்து ரூ.27 ஆகவும், பெருந்துறை-கோவைக்கு ரூ.51-ல் இருந்து ரூ.55 ஆகவும், ஈரோடு -கோவைக்கு ரூ.63-ல் இருந்து ரூ.70 ஆகவும், ஈரோடு -சேலத்துக்கு ரூ.43-ல் இருந்து ரூ.48 மற்றும் ரூ.50 ஆகவும் என பெரும்பாலான வழித்தடங்களில் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 350 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் கட்டணம் உயராத நிலையில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்ந்திருப்பது, பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சில்லரை தட்டுப்பாடு

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-

தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தவில்லை. சில பஸ்களில் சில்லரை இல்லை என்பதால் ரூ.1, ரூ.2 தராமல் இருந்திருப்பார்கள். நாங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு. அரசு அறிவித்தால் மட்டுமே உயர்த்தலாம். தற்போது ரூ.1, ரூ.2, ரூ.5 சில்லரை தட்டுப்பாடாக உள்ளது. சில்லரையை கமிஷன் கொடுத்து நாங்கள் வாங்குகிறோம்.

இருந்தும் டிக்கெட்டில் எழுதிக்கொடுத்து, மறுநாள் பயணிக்கும்போது சில்லரை பெறும் பயணிகள் கூட உள்ளனர். எனினும் டீசல் ஒரு லிட்டர் ரூ.65 இருந்தபோது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றாலும், இதர செலவுகள் அதிகரித்துள்ளதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இருந்தும் அரசு கூறும் கட்டணத்தை மட்டுமே பெறுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடும் நடவடிக்கை

தனியார் பஸ்களில் கட்டண உயர்வு குறித்து கேட்டபோது ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவைநாதன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இதுகுறித்து தெரிவித்து, அரசு உத்தரவு இல்லாமல் பஸ் கட்டணம் உயர்த்தக்கூடாது என்று கூறி உள்ளோம்.

இன்று (சனிக்கிழமை) முதல் பழைய கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து தனியார் பஸ்களில் ஆய்வு செய்யப்படும். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story