கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆய்வு கூட்டம்
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:- முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், சில்லறை உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் மற்றும் எப்.எல். உரிமம் பெற்ற தங்கும் விடுதிகளை ஆய்வு செய்வதற்கு உதவி ஆணையர், கலால்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு விருதுநகர் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும், மண்டல மேலாளர் நுகர் பொருள் வாணிப கழகம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாளையம் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் துணை போலீஸ் சூப்பிரண்டு சாத்தூர் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும் ஆக மொத்தம் 3 தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணயம்
மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அரசு நிர்ணயம் செய்துள்ள விலைபட்டியலை வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும் படி வைக்க வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையினை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விற்பனைவிலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த 7 டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மேற்கண்ட பணியாளர்களிடமிருந்து ரூ. 47,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
மேற்கண்ட தணிக்கை குழுக்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில் விதிமீறல்களில் ஈடுபட்ட 5 எப்.எல்.உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஒரு எப்.எல். உரிமம் பெற்ற தங்கும் விடுதிகளிடம் விதிமீறல்களுக்கான விளக்கம் கோரி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் தொடர்புடைய விற்பனையாளர் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எப்.எல். உரிமம் பெற்ற மனகிழ் மன்றங்கள் மற்றும் உரிமம் பெற்ற தங்கும் விடுதிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.