பதிவு செய்த கரும்பை பிற ஆலைகள், வெளி சந்தைகளில் விற்றால் கடும் நடவடிக்கை


பதிவு செய்த கரும்பை பிற ஆலைகள், வெளி சந்தைகளில் விற்றால் கடும் நடவடிக்கை
x

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை பிற ஆலைகள் மற்றும் வெளி சந்தைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை பிற ஆலைகள் மற்றும் வெளி சந்தைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சர்க்கரை ஆலை

வேலூர் மாவட்டம் அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டிற்கான அரவை பருவத்திற்கு 5,990 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிற்கான அரவை பருவத்தில் அரவை செய்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் நிலுவைத்தொகை எதுவும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆலைகளுக்கு பதிவு செய்த கரும்புகளை விதிகளுக்கு புறம்பாக எடுத்து செல்ல சில இடைத்தரகர்கள், வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். இதனால் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.

வெளிசந்தைகளில் விற்றால் நடவடிக்கை

சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை முறைகேடாக வெளிச்சந்தை அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. இந்த முறைகேட்டில் ஈடுபடும் சங்கத்தினர், இடைத்தரகர்கள், வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம், அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்க்கரை ஆலை பகுதிக்கு உட்பட்ட பதிவு மற்றும் பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதன்பின்னரே தங்களது கரும்புகளை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் கரும்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story