சென்னிமலை விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் உயர்வு கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை தோல்வி- இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
சென்னிமலை விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் உயர்வு கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை தோல்வி- இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
சென்னிமலை
சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் மற்றும் கூலி உயர்வு குறித்த ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் தற்போது காலாவதி ஆனதால் புதிதாக 25 சதவீதம் போனஸ் தொகை மற்றும் தற்போது வாங்கி வரும் கூலியில் இருந்து 40 சதவீதம் கூலி உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை வைத்தன. பின்னர் இதுகுறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த திங்கட்கிழமை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்துடன் நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு தொழிலாளர் நல ஆணையர் மூலம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடமும், அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று இரவு அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி விசைத்தறி சங்க ஒன்றிய செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, எல்.பி.எப். பொறுப்பாளர் கே.எஸ்.பி.ராஜேந்திரன், ஏ.டி.பி. பொறுப்பாளர் பி.மாரப்பன், அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு கன்வீனர் என்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.