ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
x

சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

சேலம்

சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

வேலை நிறுத்த போராட்டம்

ஊராட்சி செயலாளர்களுக்கு பணி உறுதிப்படுத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு என தனியாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். வட்டாரம், உதவி பொறியாளர் பணிகளுக்கு தொழில் நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ஜான்ஆஸ்டின் கூறியதாவது:-

8 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதையடுத்து இன்று (நேற்று) ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

வெறிச்சோடி காணப்பட்டன

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் 900 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 80 சதவீதம் பேர் ஈடுபட்டு உள்ளோம். அதன்படி 700 பேர் நேற்று ஒருநாள் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். 10 சதவீதம் பேர் ஏற்கனவே விடுமுறையில் உள்ளனர். 10 சதவீதம் பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே தமிழக அரசு கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். வேலை நிறுத்த போராட்டத்தால் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story