வேலை நிறுத்தம் 18-வது நாளாக நீடிப்பு: என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் பிஆர் பாண்டியன் தொடங்கி வைத்தார்
என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் அவர்கள் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நெய்வேலி,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாரத பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்த சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி.ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நெய்வேலி தலைமை அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு போராட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திடலில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது. இருப்பினும் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிகிறது.
உண்ணாவிரத போராட்டம்
இந்த நிலையில் நேற்று முதல் ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.