"டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை"- ஆய்வு கூட்டத்தில் மேயர் சரவணன் தகவல்
நெல்லை மாநகர பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆய்வு கூட்டத்தில் மேயர் சரவணன் தெரிவித்தார்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் சுகாதார நிலைக்குழு தலைவர் ரம்ஜான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், ''நெல்லை மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த டிசம்பர் மாதம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் 248 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 9,435 பேர் பயன் அடைந்து உள்ளனர்.
வீடுகள், வணிக வளாகங்களில் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுப்புழு கண்டறியப்பட்ட 67 வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.
இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுதவிர மாநகர நல அலுவலர் சரோஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பருவமழை பொழிவதையொட்டி மாநகர பகுதியில் காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது.
எனவே காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளின் பெயர், முகவரியை மாநகர நல அலுவலருக்கு தினமும் காலை 8 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். chotnvnew2008@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த IgM Elisa என்ற பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.