தனுஷ்கோடியில் பலத்த காற்று: அரிச்சல்முனை சாலை கடற்கரையாக மாறியது


தனுஷ்கோடியில் பலத்த காற்று: அரிச்சல்முனை சாலை கடற்கரையாக மாறியது
x

பலத்த காற்றால் மணல் நிரம்பி தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலை கடற்கரை போன்று மாறியது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பலத்த காற்றால் மணல் நிரம்பி தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலை கடற்கரை போன்று மாறியது.

மணல் மூடிய சாலை

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

இதனால் அரிச்சல்முனை சாலை அருகே சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையே தெரியாத அளவிற்கு மணல் நிரம்பி, சாலையானது கடற்கரை போன்று மாறிவிட்டது. இது காண்பதற்கு வித்தியாசமாகவும், அழகாகவும் தெரிந்தாலும் அந்த சாலையில் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட எந்த சுற்றுலா வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு மணல் குவிந்துவிட்டது.

இதனால் நேற்று தனுஷ்கோடி சென்ற அனைத்து சுற்றுலா வாகன ஓட்டிகளும், சற்று தூரத்துக்கு முன்னதாகவே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து சென்று கடலின் அழகை பார்த்து ரசித்தனர்.

முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் தனுஷ்கோடி சாலையில் பலத்த காற்றின் போது குவியும் மணலை உடனுக்குடன் அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், வாடகை வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீறி எழுந்த அலைகள்

தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாக இருப்பதால், சாலையோர தடுப்பு கற்களையும் தாண்டி சாலை வரை கடல் நீர் வந்து செல்கிறது. மேலும் எம்.ஆர்.சத்திரம் துறைமுக பகுதியில் மோதி பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன.

பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரம், பாம்பன் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 3-வது நாளாக நேற்றும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story