தேன்கனிக்கோட்டையில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டம்ராமசந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 1,500 பேர் கைது
தேன்கனிக்கோட்டை, செப்.13-
தேன்கனிக்கோட்டையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு, மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு ராமசந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் லகுமையா, மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாதையன், விவசாய அணி மாவட்ட செயலாளர் பழனி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மறியல் போராட்டம் நடந்ததால் அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ராமசந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.