ஓசூர் அருகே தமிழக எல்லையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மறியல் போராட்டம்
ஓசூர் அருகே தமிழக எல்லையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்
ஓசூர் அருகே தமிழக எல்லையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறியல் போராட்டம்
கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும், தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரை திறந்து விட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதை கண்டித்தும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஓசூரில் மாநில எல்லையருகே, நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் கணேஷ் ரெட்டி (மேற்கு) சுப்பிரமணி (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உலக விவசாயிகள் கூட்டமைப்பு சங்க மாநில துணைச் செயலாளர் நல்லா கவுண்டர், சட்ட விழிப்புணர்வு மாநில செயலாளர் சதீஷ், இயற்கை விவசாயம் மாநில தலைவர் வேலுசாமி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாகராணி, மாநில துணை பொதுச்செயலாளர் நேதாஜி, சேலம் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
முன்னதாக மூக்கண்டப்பள்ளியில் இருந்து, காலிக்குடங்களுடன் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கர்நாடக எல்லையை முற்றுகையிட ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது, இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஈசன் முருகசாமி பேசுகையில், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அதே கர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றில் பெங்களூருவில் சாக்கடை மற்றும் தொழிற்சாலை கழிவுநீரை திறந்து விடுகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய அணைகளின் நீர் சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.இந்த மறியல் போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.