ஈரோட்டில், சுதந்திர தினத்தன்று முன்னாள் ராணுவத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு- உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்
சுதந்திர தினத்தன்று, முன்னாள் ராணுவத்தினர் ஈரோடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஈரோடு
சுதந்திர தினத்தன்று, முன்னாள் ராணுவத்தினர் ஈரோடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் மற்றும் விதவையர்கள் சங்கம் சார்பில், இந்தியாவில் பல மாநிலங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் தமிழகத்திலும் வீட்டு வரி விலக்கு அளிக்க வேண்டும். முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கு அளிக்கப்படும் கேண்டீன் கார்டு திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். விதவைகளுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
போரில் உயிர் இழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வீடு கட்டி தருவதோடு ரூ.1 கோடி வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் படைவீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, சுதந்திர தினமான நேற்று, ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
ஆனால், இந்த போராட்டத்திற்கு ஈரோடு சூரம்பட்டி போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக சங்கத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் பழனியப்பன், விதவைகள் சங்க தலைவி தீபா ஆகியோரை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதையறிந்த முன்னாள் ராணுவத்தினர், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு
எனினும் அதனை ஏற்காததால், மாலை வரை உண்ணாவிரதம் தொடர்ந்தது. பின்னர் பழனியப்பன், தீபா ஆகியோரை போலீசார் விடுவித்ததை தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுதந்திர தினத்தன்று முன்னாள் ராணுவத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.