குடிநீர் சீராக வினியோகிக்க கோரி சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர்-வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடிநீர் சீராக வினியோகிக்க கோரி சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னிமலை
குடிநீர் சீராக வினியோகிக்க கோரி சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், வார்டு உறுப்பினர்கள் 14 பேர் என மொத்தம் 15 பேர் வந்தனர். பின்னர் அனைவரும் அலுவலகத்தின் செயல் அலுவலர் அறைக்குள் நுழைந்து அங்கு உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டக்காரர்கள் கூறும்போது, 'சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் உள்ள 4 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் பற்றாக்குறை
பொன்விழா கூட்டு குடிநீர் திட்டமான 2-வது காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் சென்னிமலை பேரூராட்சிக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாக பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறி வந்தனர்.
ஆனால் கடந்த 18 நாட்களுக்கு மேலாக சென்னிமலை பகுதிக்கு தினமும் 6 லட்சம் முதல் 10 லட்சம் லிட்டர் வரை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரூராட்சி உதவி இயக்குனர்
இதுசம்பந்தமாக நாங்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் போதுமான தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்' என்றனர்.
இதுபற்றி செயல் அலுவலர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேசனிடம் (பொறுப்பு) கூறினார். பின்னர் செயல் அலுவலரிடம் அவர் போனில், ''குடிநீர் பிரச்சினை குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள்' என்று கூறியுள்ளார். இதை கேட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனரை கண்டித்து அலுவலகத்தின் முன்புறமாக உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (நிர்வாக பிரிவு) முத்துலிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் அங்கு வந்து பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழாய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு மாலை 6 மணி அளவில் தலைவர் மற்றும் வார்டு் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.