ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்பந்தம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 3 நாட்களுக்கு மேலாக விடுப்பு எடுத்தால் மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற வேண்டும் என நிர்பந்திப்பதை தவிர்க்க வேண்டும். பிற துறை பணிகளை செய்ய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். தினமும் புள்ளி விபரங்கள் கேட்பது, இரவு நேர கூட்டம், எப்போது வேண்டுமானாலும் வலை தள கூட்டம் நடத்துவது, பிற துறை பணிக்கு செல்ல வைத்துவிட்டு, இந்த துறை தொடர்பாக பணியை முடிக்க நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும்.
உதவி இயக்குனர், கூடுதல் கலெக்டர் ஆகியோரின் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் பணிச்சுமை காரணமாக, தாளவாடி அருகே உள்ள தலமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த முத்தான் (வயது 45) என்பவர் உடல் நலம் பாதித்து இறந்தார். எனவே, பணிச்சுமையை குறைக்க வேண்டும். விதிப்படி பணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு கலெக்டர் அலுவலக 3-ம் தளத்தில் உள்ள உதவி இயக்குனர் (பஞ்சாயத்துக்கள்) அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். அனைவரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை தொடரப்போவதாக, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
பணி புறக்கணிப்பு
இதேபோல் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 வட்டாரங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக, இதை சார்ந்த பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் 225 ஊராட்சி செயலர்களும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு உள்ளிருப்பு போராட்டம் நேற்று மாலை வாபஸ் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.