ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 4 நாட்களாக நடந்த ஒப்பந்த பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த ஒப்பந்த பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த ஒப்பந்த பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும். ஓய்வு அறை வழங்க வேண்டும். ஒப்பந்த முறைபடி 3 சிப்ட் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும்.
அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஒப்பந்த பணியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 29-ந் தேதி முதல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
வாபஸ்
இந்த போராட்டத்தை கைவிட்டு பணியில் திரும்ப வேண்டும் என்று அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர்கள் கடந்த 4 நாட்களாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே கொட்டும் பனியிலும் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்யும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டர் கோம்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் 15 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து ஒப்பந்த பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினார்கள்.