11 கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு


11 கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு
x

தம்மம்பட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து 11 கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சேலம்

தம்மம்பட்டி

தம்மம்பட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து 11 கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பிச்சை எடுக்கும் போராட்டம்

தம்மம்பட்டி பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருபவர் கவிதா மற்றும் கவுன்சிலரான அவருடைய கணவர் ராஜா ஆகியோர் மற்ற கவுன்சிலர்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் திட்டப்பணிகளுக்கு ஏலம் விடுவது உள்ளிட்ட பணிகளை தன்னிச்சையாக மேற்கொள்வதாக பேரூராட்சியின் 11 கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடராஜன், காவியா, ரேவதி, நித்தியா, திருச்செல்வம், செல்வி, புவனேஸ்வரி, சந்திரா, லட்சுமி, செந்தில் உள்பட 11 கவுன்சிலர்களும் பேரூராட்சி தலைவரை கண்டித்து, பேரூராட்சி அலுவலக நுழைவு வாசலில் கைகளில் தட்டுடன் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நேற்று முன்தினம் நடத்தினர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் பேரூராட்சி தலைவர் கவிதா, கவுன்சிலர் ராஜா ஆகியோர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் பேரூராட்சி தலைவர் கவிதா ஆகியோர் இனிமேல் கவுன்சிலர்களிடம் கேட்காமல் எந்த பணிகளும் செய்ய மாட்டோம் என தெரிவித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர்.

கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசனும் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு...

இந்த நிலையில் நேற்று பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த 11 கவுன்சிலர்களும் செயல் அலுவலர் சத்தியமூர்த்தியிடம் பேரூராட்சி மன்ற கூட்டத்தை விரைவில் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர். இல்லை என்றால் 11 கவுன்சிலர்களும் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர், உடனடியாக அவசர கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story