கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி 17-ந் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்; உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு


கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி 17-ந் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்; உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு
x

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி 17-ந் முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவித்தார்.

ஈரோடு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி 17-ந் முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவித்தார்.

கொள்முதல் விலை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். மாடுகளின் தீவன செலவு, பராமரிப்பு செலவு அதிகரித்து இருப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பால் வழங்கி வருகிறார்கள்.

ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணி வேராக செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணி வரன்முறை செய்வதற்கு தடையாக உள்ள அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஆவின் நிறுவனம் சார்பில் இலவச காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

பால் நிறுத்த போராட்டம்

முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு உள்ள அவசரகால மருத்துவ சேவையை ஆவின் சங்க பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். கிராம சங்க பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை அமல்படுத்த வேண்டும். கால்நடை தீவனத்துக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பாலின் தரம், அளவு அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி பாலுக்கான பணம் பட்டுவாடாவை காலதாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

இந்த கோரிக்கையை வருகிற 16-ந் தேதிக்குள் நிறைவேற்றி கொடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற 17-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது சங்க மாநில பொருளாளர் ராமசாமி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ளம் ஓடை பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story