விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சங்ககிரி

தேவூர்- எடப்பாடி குரும்பப்பட்டி வரை உயர்மின் பாதையை விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைத்து கொண்டு செல்லாமல் சரபங்காநதி ஆற்றின் கரையோரம் கொண்டு செல்ல வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்ககிரி தாலுகா விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் பெருமாள், சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, துணை செயலாளர் தங்கவேல் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக கட்சி கொடியுடன் வந்தனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சங்ககிரி தேவி, கொங்கணாபுரம் விஜய்சாரதி மற்றும் போலீசார் சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்பு அமைத்து அலுவலகத்தின் உள்ளே போராட்டக்காரர்களை நுழைய அனுமதிக்க வில்லை. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்துக்கு வெளியே சாலையோரத்தில் தரையில் அமர்ந்து வெயிலில், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் கிடைத்து அங்கு வந்த சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா, போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சங்ககிரி தாசில்தார் பானுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பட்டா நிலங்களில் அமைக்கப்படும் உயர் மின் கோபுரங்களை சரபங்காநதி ஆற்று கரையோரம் மாற்றி அமைக்க பரிசீலனை செய்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story